ஞானசேகரன் திமுக அனுதாபிதான்.. ஆனால்..? - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!
Webdunia Tamil January 08, 2025 10:48 PM

ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல என்றும், அவர் திமுக அனுதாபி என்றும், ஆனால் அதே நேரத்தில் அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரம் குறிப்பாக தொடர்பாக, சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தன. அதில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல என்பதை உறுதியாக சொல்கிறேன். ஆனால் அதே நேரத்தில், அவர் திமுக அனுதாபி மற்றும் ஆதரவாளர் என்பதையும் நான் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் படம் எடுத்திருக்கலாம். அதிலும் தவறு இல்லை. அவர் யாராக இருந்தாலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும், யாராக இருந்தாலும், காவல்துறையாகவே இருந்தாலும், கைது செய்து நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் என்றும், சம்பவம் நடந்த உடனே அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் முதல்வர் கூறினார்.

என்னுடைய அரசை பொருத்தவரை, பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும், வேறு எதையும் பார்ப்பதில்லை என்றும், அவர் திட்டவட்டமாக கூறினார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று நியாயம் பெற்று தருவதை தவிர, தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறோம் என்பதையும் முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.