விக்ரம் படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியதை அடுத்து ரஜினிகாந்த் அவருடன் கைகோர்த்தார்.
இந்த நிலையில் கூலி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், ஷாபின், சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் இணைந்து இருக்கிறது.
இந்தப் படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாய்லாந்து, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படத் தயாரிப்புப் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், தாய்லாந்தில் நடைபெறும் கூலி படத்தின் படப் பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்துக்குத் தாய்லாந்து செல்வதற்காக வந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,” கூலி திரைப்படத்தின் பணிகள் 70% நிறைவடைந்து இருக்கிறது, இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளது” என்றார்.
அப்போது தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகக் கூறுகிறார்களேயெனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பத் திடீரெனக் கோபமடைந்த ரஜினிகாந்த்,” அரசியல் கேள்விகளைக் கேட்க வேண்டாமென நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் தேங்க்யூ” எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் ரஜினி விமான நிலையம் வந்திருந்த தகவலைக் கேட்டு அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரஜினியை பார்த்த உற்சாகத்தில் தலைவா தலைவா என அவர்கள் கத்திக் கூச்சலிட்ட நிலையில் அவ்வாறு சத்தம் போடக் கூடாது என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட ரஜினிகாந்த் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.