தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் நத்தக்குழியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மனைவி காசியம்மாள். ரங்கநாதன தம்பி சின்னத்தம்பி. ரங்கநாதன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவரது வீடு மற்றும் இடத்தை சின்னத்தம்பி ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு கணவரின் சொந்த இடத்தில் வசிக்க விடாமல் சின்னத்தம்பி தகராறு செய்து வருவதாக தெரிகிறது. இது குறித்து காசியம்மாள் செந்துறை காவல் நிலையம், தாசில்தார் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளிப்பதற்காக காசியம்மாள் தனது மகள்கள் தீபா, ராசாத்தி, செல்வராணி உட்பட 5 பெண்களுடன் நேற்று காலை வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தாங்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து 5 பேரும் உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
காசியம்மாளிடம் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சனை காரணமாக புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றோம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், காசியம்மாள் உட்பட 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.