"கம்யூனிஸ்ட் தலைவர்கள் குறித்து ஆ.ராசா பேசியது தவறு"- சண்முகம் பரபரப்பு
Top Tamil News January 08, 2025 04:48 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக ஆதரவளிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.


சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “விழுப்புரத்தில் நடைபெற்ற 24வது மாநில மாநாட்டில் 25 மேற்பட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு கடைபிடிக்கும் அராஜகப் போக்கின் விளைவாக வேலையின்மை கடுமையான பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை திணிக்கும் தீவிரமான வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைய தினம் யுஜிசி புதிய உத்தரவை விவாதத்திற்காக வெளியிட்டு உள்ளார்கள். பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசாங்கத்திற்கு இருக்கின்ற உரிமையை திரும்ப பெற்றுக்கொண்டு ஆளுநர் , யுஜிசி உறுப்பினர் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அராஜகத்தின் உச்சம். இது உடனடியாக திரும்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஒற்றைக் கருத்துடைய மற்ற கட்சிகளுடன் இணைந்து பேசி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

சட்டமன்றத்துக்கு செல்வதும், வெளிநடப்பு செய்வதும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு சட்டமன்ற மரபின்படி நடைபெற்று வருவதை காரணம் காட்டி வெளி நடப்பு செய்வதை வேலையாக வைத்திருக்கிறார் ஆளுநர். மாநில திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள். சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றி உள்ளார்கள்.மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். ஒன்றிய பிஜேபி அரசு மாநிலத் திமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் நின்று போராட்டத்தை முன்னெடுப்போம்.

எங்கள் கட்சியில் ஜனநாயக நடைமுறைப்படி நடைமுறைகளை தெரியாமல் பேசுபவர்கள் தான் இவர்கள். முன்னாள் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேசியதற்கும் மாநில செயலாளர் மாற்றப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கொள்கையை நிலை நிறுத்துவதில் திமுக இன்றளவும் நிலை நிற்கிறது.  திமுகவின் ஆதரவு இல்லாமல் ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க சாத்தியமில்லை.  ஒன்றிய பாஜகவை எதிர்க்க திமுகவோடு நின்று போராட வேண்டிய சூழல் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக ஆதரவளிக்கும்.  2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று தான் முதலமைச்சர் அவர்கள் சொல்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் சுயநலவாதிகள் என ஆ.ராசா சொல்வது மிக மிக தவறானது. அடிப்படையற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக செயல்பட்டு கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.