Jayachandran: `ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு...' - மறைந்தார் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன்
Vikatan January 10, 2025 02:48 AM
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால், கேரளா திருச்சூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

கேரளாவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். காதல், ஏக்கம், பக்தி என எதுவாகினும், இசை ரசிகர்களின் செவிகளில் தனது தனித்துவமான குரலால் இளைப்பாற்றும் ஜெயச்சந்திரன், தேசிய விருது (1), கேரளா அரசு விருது (5), தமிழ்நாடு அரசு விருது (2 (1- கலைமாமணி விருது)) ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.

ஜெயச்சந்திரன்

குறிப்பாக, தமிழில் பாரதி ராஜாவின் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் `கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி' படலைப் பாடியதற்காக, 1994-ல் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகருக்கான திரைப்பட விருது பெற்றார். தமிழில், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, டி. ராஜேந்தர், கங்கை அமரன், ரஹ்மான், தேவா, வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார், ஜி.வி. பிரகாஷ் என பலரின் இசையில் ஜெயசந்திரன் பாடியிருக்கிறார்.

ஜெயச்சந்திரன்

தமிழில், அதிகம் இளையராஜா இசையில் இவர் பாடியிருக்கிறார். விஜயகாந்த்துக்கு `ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு' முதல் விஜய்க்கு `சொல்லாமலே யார் பார்த்தது' வரை தமிழ் ரசிகர்களின் தனி இடம் பிடித்திருப்பவர் ஜெயசந்திரன்.

`தாலாட்டுதே வானம்' என்ற கான குரல், காற்றின் வழி எங்களை என்றும் தாலாட்டும்! திரைத்துறை உங்களை நினைவுகூரும்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.