ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், கவாஸ்கர் விஷயத்தில் தவறு செய்துவிட்டது; கிளார்க் அதிருப்தி..!
Seithipunal Tamil January 10, 2025 09:48 AM

கவாஸ்கர் விஷயத்தில் ஆஸி.கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது என்று கிளார்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-1 (5 போட்டிகள்) என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இதன் மூலம் 10 வருடங்களுக்கு பின் இந்த தொடரில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கர் இணைந்து வழங்குவர் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலன் பார்டரை மட்டுமே வைத்து கோப்பையை வழங்கியது.

இதனால் அதிருப்தியடைந்த சுனில் கவாஸ்கர், இந்தியா தோற்றிருந்தாலும் கோப்பையின் பெயரில் தம்முடைய பெயர் இருப்பதால் தாமும் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கியிருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கோப்பையை சுனில் கவாஸ்கரும் இணைந்து வழங்கியிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விஷயத்தில், "ஆஸ்திரேலிய வாரியம் தவறு செய்துவிட்டது என்று நினைக்கிறேன். அதே சமயம் இந்தியா வென்றால், கவாஸ்கரும் ஆஸ்திரேலியா வென்றால் ஆலன் பார்டரும் கோப்பையை பரிசாக கொடுப்பார்கள் என்பது தொடருக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது.  எனவே அவர்களுக்கு அது ஆச்சரியமாக இருந்திருக்காது. ஆனால் எனக்கு, அது அர்த்தமற்றதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னுடைய கருத்துப்படி யார் வென்றார்கள் என்பதை தாண்டி கோப்பையை வழங்க அந்த இருவரும் மேடையில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் சேர்ந்து வழங்கியிருக்க வேண்டும். ஆலன் பார்டர் - சுனில் கவாஸ்கர் ஆகிய இருவருமே ஒரே சமயத்தில் நம் நாட்டில் இத்தொடருக்காக வர்ணனை செய்வதை பார்ப்பதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பைக்கு பெயிரிடப்பட்ட 2 ஜாம்பவான்களும் ஒரே சமயத்தில் நம் நாட்டில் இருக்கிறார்கள். அது போன்ற வாய்ப்பை நாம் பயன்படுத்தாமல் இப்படி தவற விட்டிருக்க கூடாது. அது கவாஸ்கரை புண்படுத்தியது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் இருவரும் கோப்பையை வழங்க மேடையில் இருந்திருக்க வேண்டும்" என்று கிளார்க் மேலும் தெரிவித்துள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.