விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதம் தோறும் பிரதோஷம், பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் மார்கழி மாத பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு நாளை ஜனவரி 11ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரையிலான 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.
காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
அதே போல் மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிக்க கூடாது எனவும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மாதம் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர் .