தமிழ் சினிமாவில் வில்லானாக அறிமுகமாகி ஹீரோவாக உச்சம் தொட்ட நடிகர்கள் பலர் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் மன்சூர் அலிகான் வரை இந்த லிஸ்ட்டில் உள்ளனர். இவ்வாறு இயக்குநர் இமயம் பாரதிராஜா திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னாளி பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அதன்பின் ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் நெப்போலியன்.
இவர் நடித்த முதல் படமான புதுநெல்லு புதுநாத்து படத்தில் 28 வயதிலேயே 60 வயது முதியவர் கதபாத்திரம் கொடுத்தார் பாரதிராஜா. இப்படம் வெற்றியடைய தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள் நெப்போலியனைத் தேடி வந்தது. ரஜினிகாந்துடன் எஜமான் படத்தில் வில்லனாக நடிக்க புகழின் உச்சிக்குச் சென்றார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் உச்ச நடிகர்களுக்கு வில்லான நடித்தார்.
நெப்போலியனின் தோற்றமே வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியதால் இயக்குநர்கள் இவரின் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் நெப்போலியனை ஹீரோவாக உயர்த்தினார். 1994-ல் வெளியான சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நெப்போலியனை ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்தியது. இப்படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.ஸ்ரீகாந்த் நெப்போலியனிடம் சென்று எங்களிடம் ஒரு கதை உள்ளது. அதில் நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் நெப்போலியன் அப்போது வில்லான படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஹீரோவாக நடிப்பது பற்றி நிறைய யோசித்திருக்கிறார். மேலும் சீவலப்பேரி பாண்டி கதை ஜுனியர் விகடனில் சௌபா என்ற எழுத்தாளரால் தொடர்கதையாக வெளிவந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இக்கதை எழுதப்பட்டது. பின்னர் இக்கதை புத்தக வடிவில் வந்தது.
இந்நிலையில் இப்புத்தகத்தை படித்துப் பார்த்து கதை பிடித்தால் நடியுங்கள் என்று தயாரிப்பாளர் கூற, நெப்போலியன் சீவலப்பேரி பாண்டி கதையை படித்துப் பார்த்திருக்கிறார். இக்கதையால் மிகவும் ஈர்க்கப்பட்ட நெப்போலியன் பின்னர் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். படம் ஹிட் ஆனால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கலாம். இல்லையெனில் வில்லனாகத் தொடர்ந்து நடிக்கலாம் என்று கணக்குப் போட்டிருந்தார்.
ஆனால் நெப்போலியன் எதிர்பார்த்ததற்கும் மேலாக சீவலப்பேரி பாண்டி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. நெப்போலியனை வில்லனாகப் பார்த்தவர்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து கிழக்குச் சீமையிலே, எட்டுப்பட்டி ராசா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றார் நெப்போலியன்.