கடந்த 17ஆம் தேதி ஓமந்தூர் மருத்துவமனை அருகே முகமது கௌஸ் என்பவரை காரில் கடத்தி சென்று ரூ. 20 லட்சம் வழிபறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன், அதிகாரி பிரதீப் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் 3 நாட்களாக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில் சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பவர் இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன் மற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் மட்டும் தனியாக கடந்த 3 மாதங்களில் 4 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு அதன் மூலம் சுமார் 1 கோடி வரை பணம் வழிப்பறி செய்ததும் தெரிய வந்தது. அதோடு சன்னி லாய்டு மட்டுமே தனியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வழிப்பறி செய்ததும் தெரிய வந்தது. இவர் வழிப்பறி செய்த பணத்தில் ஜாம் பஜார் பகுதியில் ஒரு அதி நவீன உடற்பயிற்சி கூடம் அமைத்து இருப்பதும், ஈசி,ஆர் பகுதியில் ரிசார்ட் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இவர் பூக்கடை காவல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த போது தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதால் மூன்று முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. மொத்தமாக இந்த 4 பேரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி இருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. ஆக மொத்தம் வழிப்பறி சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி இருப்பதும், தற்போது காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.