தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,“தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சோ்ந்தவா் சுலைமான் (50). இவரது மனைவி சவுரால் பேபி. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இறைச்சிக் கடை நடத்தி வரும் சுலைமான், முகமது சாலிஹாபுரத்தில் உள்ள அவரது வீட்டின் எதிரே புதிதாக வீடு கட்டியுள்ளாா். இந்நிலையில், நேற்றிரவு சுலைமான் குடும்பத்தினா் பழைய வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
காலை எழுந்ததும் சென்று பாா்த்த போது, புதிய வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ.26 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகள் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்ததாம்.
இது குறித்து புகாரின் பேரில், டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. திருட்டு குறித்து கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.