GV Prakash: ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன்தான் ஜிவி பிரகாஷ். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டு அதை முறையாக கற்றுக்கொண்டவர் இவர். இசை தொடர்பான பல படிப்புகளையும் படித்து பட்டம் வாங்கியிருக்கிறார். சிறுவனாக இருந்தபோது மாமா ரஹ்மான் இசையில் சில பாடல்களை பாடியும் இருக்கிறார்.
வெயில் பட வாய்ப்பு :வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெற்ற ‘வெயிலோடு விளையாடி’ மற்றும் ‘உருகுதே மருகுதே’ பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அதிலும், உருகுதே மருகுதே பாடல் சூப்பர் மெலடி பாடலாக அமைந்து இப்போதும் இசை நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி: அடுத்து சில படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு இசையமைத்தார். அந்த படம் உருவானபோது யாரே ஒரு சிறுவன் அடிக்கடி ரஜினி அமர்ந்திருக்கும் பக்கம் வந்து அவரிடம் எப்படி பேசுவது என தயங்கி தயங்கி நிற்க அதைப்பார்த்த ரஜினி ‘என்னோடு போட்டோ எடுக்க வேண்டுமா?’ எனக்கேட்க. ‘இல்ல சார் நான்தான் சார் இந்த படத்துக்கு மியூசிக் பண்ணி இருக்கேன்’ என ஜிவி சொல்ல ரஜினியே ஆச்சர்யப்பட்டிருக்கிறார். ஜிவி பிரகாஷின் தோற்றம் அப்போது அப்படித்தான் இருந்தது. வெயில் படத்தில் இசையமைக்கும் போது அவரின் வயது 19.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்தார் ஜிவி பிரகாஷ். செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களிலும் சிறப்பான இசையை கொடுத்திருந்தார். எஸ்.கே. நடிப்பில் 300 கோடி வசூல் செய்த அமரன் படத்திலும் ஜிவி பிரகாஷ்தான் இசை.
படங்களில் ஹீரோ: டார்லிங் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய ஜிவி பிரகாஷ் இதுவரை பல படங்களிலும் நடித்துவிட்டார். அவற்றில் பல படங்கள் வெளியாகவில்லை. சமீபத்தில் கூட ஜிவி பிரகாஷின் நடிப்பில் உருவான கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில், தென் மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, மாமனிதன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய சீனு ராமசாமி சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ‘நான் முதல் படத்தை இயக்கிய போது இந்த படத்துக்கு இவன்தான் மியூசிக் டைரக்டர் என தயாரிப்பாளர் சொன்னார். டவுசர் போட்டு ஒரு சின்ன பையன் வந்தான். ’தம்பி மியூசிக் டைரக்டரை கூப்பிடு’ என்றேன். நான்தான் மியூசிக் டைரக்டர்னு சொன்னான். நீ மியூசிக் பண்ணிடுவியா.. உனக்கு அனுபவம் இருக்கான்னு கேட்டு அவரை வெளியே அனுப்பிவிட்டேன். அவர்தான் ஜிவி பிரகாஷ். அதுதான் நான் செய்த வரலாற்று தவறு’ என சொல்லி இருக்கிறார்.