`இரண்டு ரூபாய் தினக்கூலி டு 9 ஏக்கர் விவசாயி' - `பத்மஸ்ரீ' அஸ்ஸாம் விவசாயி சாதித்த கதை
Vikatan January 10, 2025 08:48 PM

அனைவருக்கும் சாப்பாடு போடும் விவசாயம், மக்களின் விருப்பமான தொழிலாக இல்லாமல் இருக்கிறது. அஸ்ஸாமில் ஒரு கூலித்தொழிலாளி விவசாயத்தை ஆர்வத்துடன் செய்து அதில் சாதித்து இருக்கிறார். அஸ்ஸாமில் உள்ள சிராக் மாவட்டத்தை சேர்ந்த சர்பேஷ்வர்(62) என்ற அந்த விவசாய ஆரம்பத்தில் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டார்.

ஆனால் இன்றைக்கு அனைவரும் மதிக்கும் மாதிரி விவசாயியாக அனைவர் முன்பும் காட்சியளிக்கிறார். சர்பேஷ்வருடன் கூடப்பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். பன்பரி என்ற இடத்தை சேர்ந்த சர்பேஷ்வரின் பெற்றோர் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்திலும், நில உரிமையாளர்களின் வீடுகளிலும் கூலி வேலை செய்து தங்களது குழந்தைகளை காப்பாற்றினர். இதில் சர்பேஷ்வர் மட்டும் விலக்கு கிடையாது. ஆனால் அந்த கஷ்டத்தில் இருந்து எப்படி வெளியில் வந்தார் என்பது குறித்து சர்பேஷ்வர் பேசி இருக்கிறார்.

``எங்களது கிராமம் வனப்பகுதியையொட்டி இருக்கிறது. அங்கு விவசாயம் செய்தால் வனவிலங்குகள் வந்து அழித்துவிடும். அதனால் எங்களால் உணவுக்குத் தேவையான பயிர்களை கூட விவசாயம் செய்ய முடியவில்லை. அதனால் கூலி வேலைக்கு செல்வது அல்லது காட்டில் சென்று விறகு பொறுக்கி எடுத்து வந்து விற்பனை செய்யவேண்டிய நிலையில் இருந்தோம். மார்க்கெட்டும் கிடையாது. வசதியானவர்களிடமும், நில உரிமையாளர்களிடம் அரிசி கேட்போம். அதன் மூலம் கிச்சடி தயார் செய்து சாப்பிடுவோம். இரவு பள்ளியில் படிப்பதில் கூட பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். இதனால் 5வது வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு 15வது வயதில் வனகாவலர் ஒருவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்து ஒரு ஆண்டு கோழிப்பண்ணையை கவனித்துக்கொண்டேன்.

பிழைப்புக்காக மேகாலயாவில் உள்ள சுரங்கத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு தினமும் 2 முதல் 4 ரூபாய் வரை மட்டுமே சம்பளம் கிடைத்தது. அது குடும்பத்திற்கு அனுப்ப போதுமானதாக இல்லை. எனக்கு என்று சொந்தமாக வேலையோ நிலமோ இல்லை. ஆனால் குடும்பத்திற்காக எதையாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். என்னால் நில உரிமையாளராகவோ அல்லது பெரிய பணக்காரனாகவோ மாறமுடியாது என்று எனக்கு தெரியும். எனவே 12 ஏக்கர் வனப்பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதனை விவசாய நிலமாக மாற்றினேன்.

விவசாயத்தில் எனக்கு எந்தவித முன் அனுபவமும் கிடையாது. ஆனால் கற்றுக்கொள்ள தயாராக இருந்தேன். எனது முன்னோர்களை பின்பற்றி அந்த இடத்தில் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்தேன். நிலத்தில் போதிய வளம் இல்லாத காரணத்தால் போதிய மகசூல் கிடைக்கவில்லை. அடுத்தவர் நிலத்தில் பல ஆண்டுகள் வேலை செய்துவிட்டு 1995ம் ஆண்டு சொந்தமாக நிலம் வாங்கினேன். அதோடு வேளாண்மைத்துறை அலுவலகத்திற்கு சென்று மகசூலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பயிற்சி எடுத்துக்கொண்டேன். குறிப்பாக ஊடுபயிர் குறித்து தெரிந்து கொண்டேன். பாக்கு பயிரிட்டேன். ஆனால் அது மகசூல் கொடுக்க வருடங்கள் பிடிக்கும் என்பதால் ஊடுபயிராக வாழை, மஞ்சள் மற்றும் பப்பாளி போன்றவற்றை பயிரிட்டதால் வருடம் முழுவதும் வருமானம் கிடைத்தது.

இப்போது சொந்தமாக 9 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறோம். அதோடு 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறேன். அதில் ஒருங்கிணைந்த விவசாயம் செய்கிறேன். பன்றிப்பண்ணை, மீன்பண்ணை, பழங்கள், பூக்களையும் பயிரிடுகிறோம். சொந்தமாக நாற்றுப்பண்ணை அமைத்து அதில் 75 ஆயிரம் நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்குகிறோம். அதோடு விவசாயிகளுக்கு பயிற்சியும் கொடுக்கிறோம்''என்றார்.

அஸ்ஸாம் அதிகாரிகளுடன் ஒடிசா, ஆந்திரா, கொல்கத்தாவிற்கு சென்று நவீன விவசாயம் குறித்து தெரிந்து வந்துள்ள சர்பேஷ்வர் 2007-ம் ஆண்டு மீன் பண்ணை குறித்து பயிற்சி எடுத்துக்கொண்டு 2 ஏக்கரில் சிறிய தொட்டிகள் அமைத்து மீன்பண்ணையும் அமைத்துள்ளார். சர்பேஷ்வரின் விவசாய பணிகளுக்காக அஸ்ஸாம் அரசின் உயரிய விருதான அஸ்ஸாம் கெளரவ் விருது வழங்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் கொடுத்து கெளரவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.