திருப்பத்தூர் மாவட்டம், கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த இடம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, பர்கூர் செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை அப்பகுதியில் முக்கிய இடமாக உள்ளது. பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பேருந்துகள் இதன் வழியாகத்தான் கடந்து செல்கின்றன. மேலும், இந்த சாலையின் வலது புறமே அரசு மருத்துவமனை உள்ளது.
சில நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட இந்த வழியைக் கடக்க முடியாமல் திக்குமுக்காடுகிறது. இந்த பரபரப்பான சாலையில், சில வருடங்களாக டிராஃபிக் சிக்னல் முறையாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த சிக்னல்கள் சரியாகச் செயல்படாததால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சிக்னல் பழுதானதற்கான காரணங்களை நாம் நேரில் சென்று விசாரித்தபோது, இதற்குப் பல காரணங்களை அப்பகுதி மக்கள் கூறினர். சிக்னலின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை. அரசு அதிகாரிகள் இதைக் கண்டு கொள்ளவில்லை என்றனர். இந்த சிக்னல்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் சாலையைக் கடக்க மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில், வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலையில் நுழைந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்களிடமும், வாகன ஓட்டிகளிடம் பேசியும், நேரடியாக விசிட் செய்தும், சிக்னலின் மோசமான நிலை குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 7 அன்று விகடன் தளத்தில், "சீரமைக்கப்படாத சிக்னல்; தொடரும் விபத்துகள்"... விரைந்து சரிசெய்வார்களா அதிகாரிகள்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும் இந்த விவகாரத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக, விபத்துகளை கருத்தில் கொண்டு பழைய சிக்னலை அப்புறப்படுத்தி புதிய சிக்னலை திறந்து வைத்துள்ளார் திருப்பத்தூர் டி.எஸ்.பி சுரேஷ்.