பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 5 பேர்.. போலீசார் தீவிர விசாரணை!
Dinamaalai January 11, 2025 04:48 AM

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த மொய்னுதீன் (52). அஸ்மா (45) என்ற பெண்ணை மணந்து மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மொய்னுதீனின் சகோதரர் சலீம் தனது மனைவியுடன் மொய்னுதீனின் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தார்.

அந்த நேரத்தில், மொய்னுதீன், அவரது மனைவி அஸ்மா, மகள்கள் அப்சா (8), அசிசா (4) மற்றும் அதீபா (1) ஆகிய ஐவரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், போலீசார் மொய்னுதீனின் வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளே சென்றனர். அதில், மொய்னுதீன் மற்றும் அவரது மனைவி அஸ்மாவின் உடல்கள் போர்வையில் சுற்றப்பட்டும், மூன்று மகள்களின் உடல்கள் ஒரு பெட்டியில் பூட்டப்பட்டும் கிடந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், 5 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அஸ்மாவின் சகோதரர் ஷமிம் அளித்த புகாரின் பேரில், அஸ்மாவின் மைத்துனர் நஸ்ரானா மற்றும் அவரது இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.