வணங்கான் படத்தை சூர்யா மிஸ் பண்ணிவிட்டாரா?!. என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?!....
CineReporters Tamil January 11, 2025 08:48 PM

Vanangaan: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் பாலா. யாரும் பேசாத, தொடாத கதைகளை எடுப்பார். இவர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், 10க்கும் குறைவான திரைப்படங்களையே இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன் மற்றும் நான் கடவுள் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் முக்கிய படங்களாக இருக்கிறது.

சியான் விக்ரம்: இவர் படத்தில் நடிக்கும் நடிகர்களிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அவர்களிடம் சிறப்பாக நடிக்க வைத்து அவர்களையும் சிறந்த நடிகராக பாலா மாற்றிவிடுவார். அதனால்தான் சேது திரைப்படம் விக்ரமுக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது. அதேபோல், பல படங்களில் நடித்திருந்தாலும் நந்தா படம்தான் சூர்யாவுக்கு நடிப்பென்றால் என்ன என சொல்லிக் கொடுத்தது.


விக்ரமுக்கு தேசிய விருது: அதேபோல், பிதாமகனில் விக்ரமுக்கு பாலா உருவாக்கிய கதாபாத்திரம் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இப்படி நடிகர்களை மோல்ட் ஆக்குவதில் பாலா கில்லாடி. ஆர்யா எல்லா படங்களிலுமே சாக்லேட் பாயாகத்தான் நடித்து வந்தார். அவரை நான் கடவுள் படத்தில் வேறு மாதிரி உருமாற்றி காட்டினார் பாலா.

இனி எப்போதும் அது போன்ற ஒரு கதாபாத்திரம் ஆர்யாவுக்கு அமைய வாய்ப்பே இல்லை. தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை முதலில் தயாரித்து நடித்தது நடிகர் சூர்யாதான். பாலாவுக்கு ஒரு செட் பேக் வேண்டும் என்கிற நிலையில் அவர்தான் கை கொடுத்தார்.


வணங்கான்: ஏனெனில், மற்ற முன்னணி நடிகர்கள் யாரும் பாலாவின் பக்கம் செல்லவில்லை. ஆனால், படம் துவங்கி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். அதனால், அருண் விஜயை வைத்து இந்த படத்தை உருவாக்கினார் பாலா. நேற்று வெளியான வணங்கான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அருண்விஜய்க்கு இது முக்கியமான படம் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

30 வருடங்களாக அருண் விஜய் சினிமாவில் இருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்பு என்னை அறிந்தால் படத்திற்கு பின் இப்போதுதான் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் தியேட்டரில் ஆனந்த கண்ணீர் விட்டார் அருண்விஜய். வணங்கான் படம் பார்த்த பலரும் இந்த படத்தை சூர்யா மிஸ் பண்ணிவிட்டார் என்றே பதிவிட்டு வருகிறார்கள். எப்படியானாலும் எதிர்காலத்தில் பாலாவும் சூர்யாவும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.