சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பா.ம.க., சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் விதிகளின்படி ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றுகூறி, அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டசபையில் தேசியகீதம் முதலில் பாடவில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதை கண்டித்து மறுநாளே தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. கொள்கை பரப்பு செயலாளர் சேகர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவல் அனுமதி இல்லாமல் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து அரசியல் கட்சியினர்களையும் காவல்துறை சமமாக பாவிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுத்தால் ஒரே மாதிரியாக மேற்கொள்ள வேண்டும். ஒரு தரப்புக்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவது, மற்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப்பில் போடுவது என்ற நிலைப்பாடு எடுக்கக்கூடாது. போராட்டத்தில் பங்கேற்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியாது.
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு போலீசார் தான் பதில் சொல்ல வேண்டி வரும். போராட்டத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை குறித்த காலத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
அதன் பின்னர், பா.ம.க. தொடர்ந்த வழக்கிற்கு வருகிற 22-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் அன்றைய தினம், இந்த மனு மீது விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.