பொங்கல் பயணம்: சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள்! முழு விவரம்!
Seithipunal Tamil January 12, 2025 05:48 AM


பொங்கல் விடுமுறைக்கு செல்லும் பொது மக்கள் வசதிக்காக சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

3. கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை (இசிஆர்) சாலை வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதோடு சென்னை மாநகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்வதற்காக ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பயணிகள் சிரமமின்றி முன் பதிவு செய்யும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.