Ajithkumar race: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பதையும் தாண்டி பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, புதிய இடங்களுக்கு பயணம் செய்து புதிய மனிதர்களை சந்திப்பது, இதுபோக துப்பாக்கி சுடும் போட்டி, ரிமோட் ஹெலிகாப்டர் என அவருக்கு பல விஷயங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. குறிப்பாக கார் ரேஸில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித்.
திருமணத்திற்கு முன் பல கார் ரேஸ்களில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். அதில் விபத்துக்களில் சிக்கி அவரின் உடம்பில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வலிகளை எல்லாம் பொறுத்துகொண்டுதான் அவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். திருமணமான பின் அவர் கார் ரேஸில் கலந்துகொள்ளவில்லை.
பைக் பையணம்: தொடர்ந்து சினிமாவில் மட்டும் நடித்து வந்தார். அதேநேரம், பைக்கில் உலகை சுற்றி வரவேண்டும் என்கிற ஆசையை மட்டும் அவர் விடவில்லை. ஏற்கனவே அது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில்தான் துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித்குமாரின் அணி கலந்துகொண்டது. அந்த அணிக்கு அஜித் கேப்டனாக இருந்தார்.
கார் ரேஸில் விபத்து: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு துபாய் சென்ற அஜித் கடந்த சில நாட்களாகவே அங்கு தனது டீமுடன் கார் ரேஸ் பயிற்சி எடுத்து வந்தார். அப்படி பயிற்சி எடுக்கும்போது அவரின் கார் விபத்தில் சிக்கிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி எல்லோரையும் அதிர வைத்தது.
கார் ரேஸில் வெற்றி: அதன்பின் அந்த ஒரு பேட்டியிலிருந்து மட்டும் அஜித் விலக அவரின் அணி கார் ரேஸில் கலந்து கொண்டது. இந்நிலையில், இந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் 3வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. இன்று காலை முதலே இது தொடர்பான வீடியோக்கள் எல்லா சமூகவலைத்தளங்களிலும் வைரலானது.
இந்நிலையில், அஜித்தின் வெற்றியை பாராட்டிய கார் ரேஸ் இயக்குனர் ‘நான் 20 வருடங்களாக இந்த கார் ரேஸில் இயக்குனராக இருக்கிறேன். என் 20 வருட கனவை அஜித் நிறைவேற்றிவிட்டார். துபாயில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஐரோப்பாவில் நடைபெறும் ரேஸிலும் அவர் பங்கேற்கவுள்ளார். எப்போதும் ஜெர்மனி மட்டும்தான் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பிரபலம் என நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்போது அஜித்தால் இந்தியாவும் பிரபலமாகிவிட்டது’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
ஒருபக்கம், அஜித்தின் இந்த வெற்றிக்கு இயக்குனர் அமீர், சிறுத்தை சிவா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரு நடிகர் கார் ரேஸில் கலந்துகொண்டு தனது டீமை வழிநடத்தி வெற்றி பெற்றிருப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.