நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். நெல்லையப்பர் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் காந்திமதி யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவத் தலங்களில் ஒன்றாக நெல்லையில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவர் யானையை அன்பளிப்பாக வழங்கினார். அதை கோயில் நிர்வாகம் சிறப்பாக பராமரித்து வந்தது. கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்த யானையை ராமதாஸ் என்ற பாகன் கவனித்து வந்தார்.
காந்திமதி யானை பக்தர்களிடம் நன்கு பழகும் என்பதால் பெண்களும் குழந்தைகளும் கூட அச்சமின்றி அதன் அருகில் சென்று பழங்களைக் கொடுப்பார்கள். கோயிலில், காந்திமதிக்கு தனி மின்விசிறி, தனி குளியல் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு பக்தர்களால் செல்லப் பிள்ளையாகவே பராமரிக்கப்பட்டு வந்தது.
சுமார் 4 டன் எடை கொண்ட காந்திமதியின் வயது 58 என்பதால், வயது முதிர்வால் கடந்த 2015-ம் ஆண்டு கால் சவ்வு கிழிந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக காந்திமதி யானை படுக்கவும், எழுவதற்கும் சிரமப்பட்டது. கடந்த சில நாள்களாக படுக்க முடியாமல் சிரமப்பட்ட காந்திமதி, இரவு நேரத்திலும் நின்று கொண்டே தூங்கியது.
மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட காந்திமதியை வனத்துறை மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் கண்காணித்து வந்தார்கள். நேற்று கீழே அமர்ந்த காந்திமதியால் மீண்டும் எழ முடியவில்லை. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு காந்திமதி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிரேன் மூலமாக யானையை எழ வைத்து உணவு கொடுக்க முயற்சி செய்யப்பட்டும் பலனின்றி இன்று காலை 7:30 மணிக்கு காந்திமதி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யானை காந்திமதி உயிரிழந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை பராமரித்து வந்த பாகன் ராமதாஸ் யானை முன்பு நின்று கண்கலங்கியபடி, "இத்தனை காலமும் உன்னை நம்பித்தானே வாழ்ந்து வந்தேன். என்னைத் தவிக்க விட்டுப் போய்விட்டாயே.." எனக் கலங்கி அழுதது பக்தர்களை கண்கலங்க வைத்தது.
பின்னர் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட காந்திமதிக்கு பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
பிற்பகல் 1.30 மணிக்கு மேல் கோயில் அருகே தாமரைக்குளம் மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் யானையின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். யானை காந்திமதி இறந்ததைத் தொடர்ந்து கோயிலின் நடை மூடப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்பு திறக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.