தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் தெற்கு பகுதி கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் இருந்த சுமார் 1200 கிலோ பீடி இலைகள் கைப்பற்றபட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்ற பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.