அலங்காநல்லூரில் அசத்திய இவரை நினைவிருக்கிறதா? - மீண்டும் தன்னை நிரூபித்த அபி சித்தர்!
Vikatan January 17, 2025 01:48 AM

அனல் பறக்க நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிகமான மாடுகளை பிடித்து அபி சித்தர் முதலிடம் பிடித்து சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை பெற்றார்.

பரிசு பெற்றபோது

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அவருடன் மகன் இன்பநிதியும் கலந்துகொண்டார்.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அலங்காநல்லூரில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

அபி சித்தர் (கடந்த ஆண்டு கலந்துகொண்டபோது)

இதில் 20 மாடுகளை பிடித்து பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் சிறந்த மாடுபிடி வீரராக அறிவிக்கப்பட்டார். ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி அவரைக் கொண்டாடினார்கள். அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

20 மாடுகளை பிடித்து அபிசித்தர் சிறந்த மாடுபிடி வீரராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவதாக சிறந்த மாடுபிடி வீரராக பொதும்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதருக்கு ஷேர் ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரராக மடப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் அறிவிக்கப்பட்டார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

சேலத்தை சேர்ந்த பாகுபலி பிரதர்ஸின் காளைக்கு சிறந்த காளைக்கான முதல் பரிசு டிராக்டருடன், கன்றுடன் கூடிய கறவை பசு வழங்கப்பட்டது. இரண்டாவதாக வந்த சிறந்த காளை உரிமையாளர் எரக்கநாயக்கனூர் சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதிக்கு மோட்டார் பைக்குடன் விவசாய இயந்திரமும் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இறுதிச்சுற்று மிகவும் பரபரப்பாக நடந்ததால் மக்கள் மிகவும் உற்சாகமாக ரசித்தார்கள்.

அபிசித்தர் கடந்த ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை பிடித்த நிலையில், 18 காளைகளை பிடித்த வீரர் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது சர்ச்சையானது. அப்போது விழாக்குழு மீதும் அமைச்சர் மூர்த்தி மீதும் அபிசித்தர் புகார் தெரிவித்தார். அதன் பின்பு அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்து முதல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.