முதலீட்டாளர்களே... இது, சவால்கள் நிறைந்த 2025... மிகக் கவனமாகவும், நம்பிக்கையோடும் நடைபோடுங்கள்!
Vikatan January 17, 2025 04:48 PM

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே கடந்த சில மாதங்கள் போதாத காலம்தான். 2024 அக்டோபர் வரையில் காளையின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, அதன் பிறகு, கரடியின் ஆதிக்கத்தில்தான் பெரும்பாலும் இருந்து வருகிறது. இந்த ஊசலாட்ட சந்தை காரணமாக, கடந்த 100 நாள்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.60 லட்சம் கோடி இழப்பு.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்றுவருவதே, இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆம், அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரையில் ரூ.1.85 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை விற்றுள்ளனர். அவர்கள் இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு... பொருளாதார மந்தநிலை, நுகர்வு குறைவு, நாடுகளுக்கிடையிலான போர்கள், பணவீக்கம், வட்டி விகித உயர்வு, உள்நாட்டு நிறுவனங்களின் நிதிநிலை செயல்பாடுகளின் ஏமாற்றம் எனப் பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், ‘2025-ம் ஆண்டும் இந்திய முதலீட்டாளர்களுக்கு சவாலாகவே இருக்கும்’ என்றே பெரும்பாலான கணிப்புகள் சொல்கின்றன. இதை நிச்சயமாக அனைவருமே கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுகள், இந்த ஆண்டில் புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான சூழல்கள் நன்றாகவே தெரிகின்றன. இதனால், நாடுகளுக்கிடையிலான உறவு, வர்த்தகத் தடைகள், வரி உயர்வுகள் என அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நிலையற்றத் தன்மைகளுக்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.

பிற நாடுகளின் மத்திய வங்கிகள் எடுக்கும் கொள்கை முடிவுகள், சந்தை நுகர்வு வளர்ச்சி, தனியார் முதலீடு, ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையும் இந்திய சந்தைக்கு சவால்களை உண்டாக்கக்கூடியவையே. இதனால், ‘2025-ல் நிஃப்டியின் வருமான வளர்ச்சியானது 7% என்ற அளவிலேயே இருக்கும்’ என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

‘அதிக எச்சரிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்’ என்பதுதான் பாலபாடம். அதை, 2025-ல் மிக அதிக எச்சரிக்கையுடன் என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ‘சந்தையை பாதிக்கும் நிகழ்வுகள், செய்திகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். குறுகிய கால முதலீடுகள் எனில்... பங்குச் சந்தை போன்ற ரிஸ்க்கான சொத்துப் பிரிவுகளில் குறைவாகவும், கடன் சார்ந்த சொத்துப் பிரிவுகளில் அதிக மாகவும் முதலீடு செய்யலாம். நீண்டகால முதலீடுகள் எனில்... தொடர்ச்சியாக சீரான முறையில் இறக்கங்களைப் பயன்படுத்தி முதலீடுகளைச் செய்யலாம்’ என நிபுணர்கள் கூறும் அறிவுரைகளை அசட்டை செய்யவே கூடாது.

தற்போதைய நிலை கவலை அளிப்பதாக இருந்தாலும், சந்தை இப்படியே இருந்துவிடாது... மீண்டும் ஏற்றத்துக்கு வந்துதான் ஆக வேண்டும். கடந்தகால வீழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்த பெரு எழுச்சிகளுமே இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

நம்பிக்கையே நல்லது!

- ஆசிரியர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.