ராமநாதபுரம் || உள்துறை செயலாளருக்கு கடிதம் - இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!
Seithipunal Tamil January 18, 2025 12:48 AM

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணன். கடந்த 16 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், திருவாடானை டி.எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து தன்னிடம் கேட்காமல் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக அலுவல் பணிகள் ஒதுக்கப்படுகிறது.

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு தன்னை கேட்காமலேயே போலீசாரை நியமித்து வருகிறார்கள். தற்போது காவல் நிலைய சரகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகின்றனர். 

ஆயுதப்படையிலிருந்து தன்னிச்சையாக எனது கவனத்திற்கு தெரிவிக்காமல் நேரடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு என்னுடைய ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து 14 போலீசாரை என்னிடம் தெரிவிக்காமல் பணியமர்த்தி உள்ளனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து, என்னை கேட்காமல் காவல் நிலையத்திலிருந்து போலீசாரை திடீர், திடீரென சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதால் காவல் நிலையத்தில் பணிகள் முடங்கி கிடக்கிறது" என்று தெரிவித்தார்.

இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்ட நிலையில் உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பிய காவல் ஆய்வாளர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.