வெள்ளை மாளிகையை தகர்க்க முயற்சி?அமெரிக்க இந்திய இளைஞனுக்கு 8 ஆண்டு சிறை!!
A1TamilNews January 18, 2025 06:48 AM

2023ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை மீது காரைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்திய 20 வயது அமெரிக்க இந்திய இளைஞன் சாய் வர்ஷித் கண்டுலாவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க க்ரீன் கார்டு பெற்றுள்ள சாய் வர்ஷித், கடந்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி மிசோரி மாநிலம் செயிண்ட் லூயிஸ் நகரிலிருந்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு விமானத்தில் சென்றுள்ளார். அங்கு யு.ஹால் நிறுவனத்தின் ட்ரக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வெள்ளை மாளிகை நோக்கிச் சென்றுள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே பாதுகாப்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. ஓட்டி வந்த ட்ரக்கை அந்த தடுப்புகள் மீது மோதியுள்ளார் சாஸ் வர்ஷித். பின்னர் தன் பையிலிருந்து நாஸி கொடியை எடுத்துக் காட்டி கோஷம் எழுப்பியுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சாய் வர்ஷித் ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர். சாய் வர்ஷித் மோதியதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

அமெரிக்க நீதிமன்ற விசாரணையின் முடிவில் சாய் வர்ஷித்துக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், சேதப்படுத்தியதற்கான ஈடாக 57 ஆயிரம் டாலர்கள் இழப்பீட்டுத்தொகையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகள் சிறைக்குப் பின் விடுவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்.

இந்திய வம்சாவளி இளைஞனின் இந்தத் தீவிரவாதச் செயல் அமெரிக்க இந்திய மக்களிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.