இலவசங்கள் குறித்த மோடி கருத்துக்கு, பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் கெஜ்ரிவால்..!
Seithipunal Tamil January 18, 2025 09:48 AM

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கை வெளியிடுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; 

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 நிதி உதவி. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும்.

எல்.பி.ஜி. பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும்.

பின்தங்கிய பகுதிகளில் ரூ.05 க்கு சத்தான உணவு வழங்க அடல் கேன்டீன்கள் அமைக்கப்படும்.

60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது;

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக அவர் பிரதமர் மோடியின் ஒப்புதலைப் பெற்றாரா?

இலவசங்களை வழங்கியதற்காக பிரதமர் மோடி 100 க்கும் மேற்பட்ட முறை என்னை விமர்சித்துள்ளார். இப்போது பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் என்னைப் போலவே இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இலவசங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என தான் கூறியது தவறு என பிரதமர் மோடி இப்போது கூறவேண்டும்.

இலவசங்கள் நாட்டு மக்களுக்கு நன்மையைத் தரும் என்பதை பிரதமர் மோடி இப்போதாவது ஏற்கவேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமாக தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.