தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதலே அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க தவெக தலைவர் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி, போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், விஜய் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், தற்போது அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனவரி 20ம் தேதி நாளை மறுநாள் திங்கட்கிழமை பரந்தூர் செல்லும் விஜய், அங்கு போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு வழங்க உள்ளார்.
த.வெ.க கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதன்முறையாக போராட்ட களத்திற்கு செல்கிறார். விஜய் மக்களை சந்திக்க ஏகனாபுரம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏகனாபுரம் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
!