அஜித்தின் விடாமுயற்சி: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில்தான் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்தான் விடாமுயற்சி என்பதால் ஓரளவு படத்தின் கதை என்ன என்பதை யூகிக்க முடிந்தது.
அடுத்தடுத்த ரிலீஸால் ரசிகர்கள் குஷி: இருந்தாலும் மகிழ்திருமேனி ஸ்டைல்னு ஒன்று இருக்கும். அதற்கேற்ப அஜித்தின் மாஸ் இதையெல்லாம் சேர்த்து படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் ரிலீஸாக இருக்கின்றது. இந்த ஒரே வருடத்தில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருப்பதால் ரசிகர்களும் குஷியாக இருக்கிறார்கள்.
திடீரென மீடியா முன் தோன்றிய அஜித்: சமீபத்தில்தான் அஜித் துபாயில் நடந்த 24 ஹெச் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார் அஜித். இது திரைப்பிரபலங்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது. அனைவரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் பல ஆண்டுகளாக மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த அஜித் இந்த வெற்றிக்கு பிறகு பல மீடியாக்களுக்கு துபாயில் இருந்தே பேட்டி கொடுத்திருந்தார்.
அந்த பேட்டியின் போது அஜித் பேசிய சில வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் ஊடகங்களுக்கு அஜித் கொடுத்த சில அட்வைஸ்களும் இப்போது வைரலாகி வருகின்றது. ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அஜித் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு: இப்போது அனைவரிடமும் மைக்கை நீட்டி அவரவர் கருத்துக்கள் பெறப்படுகிறது. அது மக்கள் மத்தியில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
அப்படி செய்வதற்கு முன்னர் அந்த நபர் அந்த விஷயம் தொடர்பாக கருத்தை சொல்வதற்கு தகுதி உடையவரா என்பதை ஊடகங்கள் யோசிக்கவேண்டும். இந்த விஷயத்தில் தற்போதுள்ள ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன் என அஜித் கூறியிருக்கிறார். இப்போது அஜித் போர்ச்சுக்கலில் நடக்கும் ரேஸில் கலந்து கொள்வதற்காக பயிற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.