தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் வட கரையில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இசை மேதை ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சமாதி அமைந்துள்ளது. அந்த இடத்தில் கோயில் எழுப்பி ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சிலை அமைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. தினமும் தியாகராஜர் கோயிலுக்கு பலர் வருகை தந்து வணங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக இசை கலைஞர்கள், இசை ஆர்வமுள்ளவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றனர்.
பஞ்சரத்தின கீர்த்தனை பாடும் இசை கலைஞர்கள்இந்நிலையில், தியாகராஜர் மறைந்த தினம் ஆராதனை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் ஏராளமான இசைகலைஞர்கள் அவரது சமாதியில் அமர்ந்து பஞ்சரத்தின கீர்த்தனை பாடி ஸ்ரீ ஸ்ரீ சத்குரு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி, தியாகராஜரின் 178 -வது ஆராதனை விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் இசை கருவிகள் மூலம் இசை அமைத்து பாடல் பாடி சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
இதனால் திருவையாறு விழாக்கோலம் கண்டது. விழாவின் முக்கிய நிழ்வான இன்று அதிகாலை, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, வீதியுலாவாக அவரது சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்தின கீர்த்தனை தொடங்கியது.
தியாகராஜர்இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, அருண் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்திருந்த கர்நாடக சங்கீத கலைஞர்கள் என ஆயிரக்கணக்கனோர், நாட்டை ராகத்தில் அமைந்த பாடலில் தொடங்கி ஆரபி ராகம், வராளி ராகம், ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி, இசைக் கருவிகளை இசைத்து ஸ்ரீ சத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, மூலவர் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.