2500 கோழிகள் தீயில் கருகின...கோழிப்பண்ணையில் கோர தீவிபத்து!
Dinamaalai January 18, 2025 05:48 PM

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில்  வசித்து வருபவர் பாலசுப்பிரமணி. இவர் அதே பகுதியில் கடந்த 16 வருடமாகக் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 2 தகர செட்டுகள் அமைத்துக் கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். கோழிக்குஞ்சுகள் பெரியதானதும் அவற்றை விற்பனை செய்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலசுப்ரமணி 5000  கோழி குஞ்சுகளை வாங்கி 2 தகர செட்டுகளில் அடைத்து வைத்திருந்தார். ஒரு செட்டில் 2,500 கோழிக்குஞ்சுகள் வீதம் 2 செட்டில் 5000  கோழிக்குஞ்சுகளை அடைத்து வளர்த்து வந்தார்.


இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோழிப்பண்ணையிலிருந்து புகை வெளியேறிச் சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர் உடனடியாக  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


எனினும் இந்தத் தீ விபத்தில் ஒரு தகர செட்டில் இருந்த 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. அந்தத் தகர செட்டு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.  2500 கோழிக்குஞ்சுகள் ரூ.1.50 லட்சமும், தகர செட்டு ரூ.13 லட்சமும் என மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் செயல்பட்டதால் மற்றொரு தகர செட்டில் இருந்த 2,500 கோழி குஞ்சுகள் உயிர் தப்பின. இதுகுறித்து   போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

!

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.