Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
Vikatan January 18, 2025 04:48 PM

Doctor Vikatan: என் மகளுக்கு 24 வயதாகிறது. அவளுக்கு இரண்டு கன்னங்களிலும் பருக்கள் இருக்கின்றன. அந்தப் பருக்களில் சீழ் கோத்துக் காணப்படுகின்றன. இந்த மாதிரியான Pus-filled pimples-க்கு என்னதான் தீர்வு? எந்த மாதிரியான சோப், க்ரீம் உபயோகிக்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

அக்னே (Acne) எனப்படும் பருவானது ஒரே ஒரு க்ரீம் போடுவதாலோ, ஃபேஸ்வாஷ் உபயோகிப்பதாலோ சரியாகாது. பருக்களில் பல வகைகளும் பல கிரேடுகளும் உள்ளன.

குட்டிக்குட்டியாக வரும் பருக்கள் தொடங்கி, நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல சீழ் கோத்துக்கொள்ளும் பருக்கள், வலி நிறைந்த பருக்கள் என அதில் நிறைய கிரேடுகள் இருக்கும்.  எனவே, ஒருவருக்கு பருக்கள் வருகின்றன என்றால், அதற்கான காரணங்களை முதலில் கண்டறிய வேண்டும்.  பெண்களுக்கு இப்படி பருக்கள் வருவதற்கு, ஹார்மோன் கோளாறுகள்  காரணமாக இருக்கலாம். பிசிஓடி பாதிப்பு இருக்கலாம்.  சரியான சருமப் பராமரிப்பு இல்லாததும், மோசமான லைஃப்ஸ்டைலும்கூட காரணங்களாக இருக்கலாம். உடலியக்கம் கவனிக்கப்பட வேண்டும்.  தேவைப்பட்டால் ரத்தப் பரிசோதனை  செய்து பார்க்க வேண்டியிருக்கும். 

சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் போன்றவற்றை வைத்துச் செய்யப்படுகிற பீல் சிகிச்சையில் எண்ணெய்ச் சுரப்பைக் கட்டுப்படுத்தலாம்.

பருக்களை சாதாரணமாக நினைத்து, ஏதோ ஒரு க்ரீம் போட்டால், அப்போதைக்கு சரியாவது போல இருக்கலாம். மீண்டும் அது வரும். பருக்களை குணப்படுத்துவதில் க்ரீம், ஃபேஸ்வாஷ், சோப் போன்றவை பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சரும மருத்துவரின் பரிந்துரையோடு அவரவர் சருமத்துக்கும், பருக்களின் காரணம் மற்றும் தீவிரம் அறிந்தும் அவை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் சரும மருத்துவர் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளையும் பரிந்துரைப்பார்.  வைட்டமின் பற்றாக்குறை இருந்தால் அதற்கான மருத்துவத்தைப் பரிந்துரைப்பார். கெமிக்கல் பீல் சிகிச்சை தேவை என்றால், அதைப் பரிந்துரைப்பார். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் போன்றவற்றை வைத்துச் செய்யப்படுகிற பீல் சிகிச்சையில் எண்ணெய்ச் சுரப்பைக் கட்டுப்படுத்தலாம். 

எனவே, உங்கள் மகளை முதலில் சரும மருத்துவரிடம் நேரில்  கலந்தாலோசிக்கச் சொல்லுங்கள். அவரது பிரச்னை, அதன் பின்னணி, பருக்களின் தன்மை, தீவிரம் ஆகியவற்றைப் பார்த்து சரியான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார். அதுதான் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையாக வெளிவர உதவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.