இது குறித்து மாநில வாணிபக் குழு (டாஸ்மாக்) தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முழுவதும் உள்ள மது விற்பனை நிலையங்களில் ஜனவரி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ.725.56 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்கப்பட்டன.
கடந்தாண்டு பொங்கல் நாள்களில் ரூ. 678.65 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் ரூ. 46 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சராசரியாக தினசரி விற்பனை சுமார் ரூ. 145 கோடியாகவும், 3 நாள்களில் மட்டும் தினசரி விற்பனையில் 67 சதவிகிதம் உயர்ந்து ரூ. 41.85 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன.
போகிப் பண்டிகையான ஜனவரி 13ம் தேதி ரூ.185.65 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான ஜனவரி 14ம் தேதி ரூ.268.46 கோடிக்கும், ஜனவரி 15ல் திருவள்ளுவர் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து, காணும் பொங்கல் பண்டிகையான ஜனவரி 16ம் தேதி ரூ.271 கோடிக்கும் மதுபானங்கள் விற்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13ம் தேதியில் இருந்து 4 லட்சம் அட்டைப்பெட்டிகள் பீர் வகைகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுவகை மதுபானங்கள் 8.5 லட்சம் அட்டைப் பெட்டிகளும் விற்கப்பட்டுள்ளன.
இந்த வருடம் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ.179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ.151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடுமுறை நாட்களில் ரூ.142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
!