நாளை திருப்பதியில் அனைவருக்கு இலவச தரிசனம்...தேவஸ்தானம் அறிவிப்பு..!
Newstm Tamil January 19, 2025 01:48 PM

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பின் படி, ஜனவரி 20ம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்கு எஸ்எஸ்டி டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது. அதனால் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அனைவரும் சர்வ தரிசனம் எனப்படும் இலவச வரிசையில் மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். ஜனவரி 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் சர்வ தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வரிசையில் மட்டுமே வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சாமி தரிசனம் செய்வதற்கான ஸ்ரீவாணி டிக்கெட்கள் இந்த இரண்டு நாட்களும் ஆஃப்லைனில் வழங்கப்பட மாட்டாது. அதே போல் ஜனவரி 20ம் தேதி திருப்பதியில், புரோட்டோகால் தவிர மற்ற விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசனத்திற்கு சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்ற ஜனவரி 10ம் முதல் ஜனவரி 19 வரை சர்வ தரிசனம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, எஸ்எஸ்டி டோக்கன் பெற்று திருமலைக்கு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது வைகுண்ட ஏகாதசி நிறைவடைய உள்ளதால் எஸ்எஸ்டி டோக்கன்கள் விநியோகம் ஜனவரி 20ம் தேதி அன்று நிறுத்தப்பட்டு, சர்வ தரிசனம் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதியில் தற்போது தினசரி சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 71,000 முதல் 75,000 வரை இருந்து வருகிறது. இதனால் உண்டியல் வருமானமும் நாள் ஒன்றிற்கு ரூ.4 கோடிக்கும் அதிகமாக இருந்து வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.