பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடு புகுந்து மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதில் சைஃப் அலிகானுக்கு உடம்பில் 6 இடங்களில் பிளேடால் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சைஃப் அலி கானுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவர் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரிக்கவும், குற்றவாளியை பிடிக்கவும் போலீஸார் 20 தனிப்படைகளை அமைத்திருந்தனர். அவர்கள் நாடு முழுவதும் குற்றவாளியை தேடி வந்தனர்.
தானேயில் பிடிபட்ட நபர்மும்பையில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார். ஆனால் அந்த நபர் குற்றவாளி இல்லை என்று தெரிய வந்ததால் விடுவிக்கப்பட்டார். சம்பவம் நடந்து பல நாள்கள் ஆன பிறகும் குற்றவாளி கைது செய்யப்படாமல் இருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் பிடிபட்டுள்ளார். மொகமத் எலியன் என்ற அந்த நபர் இன்று அதிகாலை பிடிபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மும்பை ஒர்லியில் வசிக்கும் மொகமத் பப் ஒன்றில் வேலை செய்து வந்தார். திருட்டு புகாரில் வேலையை விட்டு நீக்கப்பட்டதால். தானேயில் உள்ள பீர் பாரில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் தனது பெயரை விஜய் தாஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் சைஃப் அலிகானை தாக்கியதாக சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சைஃப் அலிகான் - Saif Ali Khanஅந்த நபர் மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலில் பிடிபட்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். சத்தீஷ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது பொதுபெட்டியில் ஆகாஷ் கைலாஷ்(31) என்ற அந்த நபர் பிடிபட்டதாக ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த அந்த நபர் சத்தீஷ்கரில் உள்ள தனது சொந்த ஊரான ஜான்கி சம்பாவிற்கு சென்ற போது பிடிபட்டுள்ளார்.
இது குறித்து நாக்பூர் ரயில்வே ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் கூறுகையில்,''மும்பை போலீஸார் ரயில் எண் மற்றும் பெட்டி விவரத்தையும், புகைப்படத்தையும் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில் ரயில் அதிகாலை 2 மணிக்கு துர்க் ரயில் நிலையம் வந்தபோது சந்தேகத்திற்குறிய நபர் பிடிபட்டுள்ளார்.
அவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது''என்று தெரிவித்தார்.
அந்த நபரிடம் விசாரணை நடத்த மும்பை போலீஸார் சத்தீஷ்கர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து மும்பை சிறப்பு போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி மற்றும் இணை கமிஷனர் சத்யநாராயண் ஆகியோர் அளித்த பேட்டியில்,'' எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவல் படி பிடிபட்டவர்தான் குற்றவாளி'' என்று தெரிவித்தனர். பிடிபட்ட நபர் முதலில் தான் நாக்பூர் செல்வதாகவும், பின்னர் பிலாஸ்பூர் செல்வதாகவும் தெரிவித்தார். சைஃப் அலிகான் வீட்டிற்கு அருகில் சம்பவம் நடந்த போது எத்தனை போன் நம்பர்கள் ஆக்டிவாக இருந்தது என்ற விபரத்தை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் குற்றவாளி பிடிபட்டுள்ளார். ஆகாஷ் மொபைல் போன் சிக்னலை போலீஸார் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தனர். சிக்னல் தொடர்ந்து மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் காட்டிக்கொண்டிருந்தது.
சைஃப் அலிகான்அதோடு அடிக்கடி போனை ஆப் செய்து கொண்டிருந்தான். இதனால் அவனை பிடிப்பதில் சிரமம் இருந்து கொண்டிருந்தது. கடைசியாக அவன் ஹவுரா செல்லும் ரயிலில் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு முறை நாக்பூர் ரயில் நிலையத்தில் அந்த போன் சிக்னல் கிடைத்தது. ஆனால், அப்போது அவனை போலீஸார் தவறவிட்டனர். போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க கடந்த 48 மணி நேரத்தில் பல ரயில்களில் மாறி மாறி பயணம் செய்திருப்பது அவனிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரண்டு பேர் பிடிபட்டுள்ளதால் யார் உண்மையான குற்றவாளி என்பது விசாரணையில்தான் தெரிய வரும்.