“தமிழக அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் முடிவு வரலைன்னா உச்ச நீதிமன்றம் தலையிடும்” என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மக்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும் தீர்க்காமல் தமிழக அரசுடன் ஆளுநர் மல்லுக்கட்டுவதும், ஆளுநருடன் தமிழக அரசு தொடர்ந்து வம்பிழுத்து முரண்டுபிடித்துக் கொண்டிருப்பதும் அழகல்ல என்று பொதுமக்களிடையே இந்த ஆட்சி பதவியேற்றதில் இருந்தே எதிரொலித்து வருகிறது.
கூடவே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் பணம் இணைக்காதது, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் முறை தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட நிலையில், சாத்தியமில்லை என்று கூறியது, மாதந்தோறும் மின் கணக்கீடு குறித்து மெளனமாக இருப்பது, நீட் ரத்து முடியாது என்று ஜகா வாங்கியது, தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாதது, நிதி இல்லை என்று பல சலுகைகளை ரத்து செய்தது எல்லாமே ஆட்சியாளர்களின் மீது மக்களின் அதிருப்திக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், கண்ணாடி பாலம், கலைஞருக்கு நடுக்கடலில் பேனா, கலைஞர் நூற்றாண்டு கட்டிடங்கள் என்று கோடிகளைக் கொட்டி அரசு பணம் வீணாக செலவு செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைக் குவித்து வருகிறது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே, தமிழக அரசுக்கும், அவருக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தி மொழி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஆதரவான கருத்துகளை ஆளுநர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
தமிழக அரசு தயாரித்து வழங்கும் ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் வாசிக்காமல், சில பகுதிகளை நீக்கியும், சேர்த்தும் படித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வெளியேறினார். தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்பட்டு வரும்நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான அரசாணைகளுக்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதேபோல, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரம் தொடர்பாகவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நடந்த வாதம்: மத்திய அரசு தரப்பில் ஆஜ ரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி: ஆளுநருக்கு எதிரான வழக்குகளை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்.
ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரங்களில் தீர்வு காணப்பட்டுள்ளதா, அல்லது பழைய நிலையே தொடர்கிறதா? தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், அபிஷேக் சிங்வி: ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்கதையாகவே உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை.
தற்போது கூட துணைவேந்தர்கள் நியமனத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. தமிழக அரசின் அனைத்து அதிகாரங்களிலும் ஆளுநர் தலையிடுகிறார். இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும், அவரது போக்கில் முன்னேற்றம் இல்லை. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவையும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரித்து, ஆளுநர் தரப்பில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்” என்று வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக அரசின் இந்த கூடுதல் மனுவுக்கு தனியாக நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டியது இல்லை. இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும். மேலும், ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் நீங்களே சுமுக தீர்வு காணாவிட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண்போம்’’ என்று ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் அறிவுறுத்தி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு - ஆளுநர் மோதல் போக்கு தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என ஆளுநர் எதிர்பார்ப்பது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
‘‘இருவருக்கும் பரஸ்பரம் சுமுக உறவு இருந்தால்தான் தீர்வு கிடைக்கும். ஆளுநர் தரப்பில் இருந்து சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம். முதல்வரும், ஆளுநரும் சந்தித்து பேசி இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநரை சந்திக்க முதல்வர் தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் ராஜ்பவன் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.