அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை... ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்!
Dinamaalai January 21, 2025 11:48 AM

அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி, கல்லூரி வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளதாக காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் வழக்கின் பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் உள்ளனர் என்றும், அவர்களை காப்பாற்ற ஆளுங்கட்சியும், காவல் துறையும் முயல்வதாக, ‘யார் அந்த சார்?’ என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேஹா பிரியா, அய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும் கைது செய்யப்பட்டிருந்த ஞானசேகரனிடமும் விசாரணை நடத்தினர். அதேபோல், அவரிடமிருந்து ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சைபர் க்ரைம் போலீஸாரிடம் வழங்கி அதில் சேமித்து வைத்திருந்த வீடியோக்களையும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்று ஞானசேகரனை, சென்னை காவல் ஆணையர் அருண் அண்மையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார். இந்நிலையில் புழல் சிறையில் உள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்டு, ஞானசேகரனை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாருக்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினர். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து ஞானசேகரனை அழைத்துச் சென்ற போலீஸார், தனி இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.