மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஐஐடி இயக்குநர்..!
Newstm Tamil January 21, 2025 12:48 PM

சென்னை மாம்பலத்தில் கோ சாலையில், கடந்த 15ம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், "எனது தந்தைக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. அப்போது மாட்டு கோமியத்தை குடித்தார். 15 நிமிடங்களில் காய்ச்சல் நின்றுவிட்டது. கோமியம் மருத்துவ குணம் கொண்டது" என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன.

 

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மீண்டும் இது குறித்து பேசியுள்ளார். அதாவது, "அமெரிக்காவில் நேச்சர் இதழில் கோமியத்தில் மருத்துவ குணம் இருக்கிறது என்பதற்கான ஆய்வு அறிக்கை வெளியானதற்கான ஆதாரம் இருக்கிறது. பத்திரிகையாளர்களான உங்களுக்கு நான் அந்த லிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறேன். தற்போது அமேசானில் கூட பஞ்சகவ்யம் விற்பனைக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பதிலுக்கு பத்திரிகையாளர்கள், "நீங்கள் சொல்லும் ஆய்வு அறிக்கையில் பஞ்சகவ்யம் நல்லது என்று கூறியிருக்கிறார்கள். வேறு சில ஆய்வுகளில் அது நல்லதல்ல என்று கூறியிருக்கிறார்களே?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காமகோடி, "நீங்கள் சொல்லும் ஆய்வு அறிக்கையை நான் பார்க்கவில்லை. நாங்கள் சில பண்டிகை நாட்களில் பஞ்சகவ்யத்தை சாப்பிடுவோம். நானும் சாப்பிடுவேன்" என்று கூறியிருக்கிறார்.

காமகோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரான டாக்டர் ரவீந்திரநாத், "மாட்டு கோமியத்தால் ஏராளமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக, எலி காய்ச்சல் உள்ளிட்டவை கூட ஏற்படலாம்" என்று எச்சரித்துள்ளார். முன்னதாக இது குறித்து கண்டனம் தெரிவித்திருந்த மாணவர் கழகம், "சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரான காமகோடி, கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தைப் பேசியிருக்கிறார். அறிவியல் படி கோமியம் என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியலுக்கு எதிராகப் பேசியிருப்பதைத் தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது. மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல் படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டிருந்தது.

 

அதேபோல, சிபிஎம், "மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனரான காமகோடி அவர்கள் கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். இது ஐ.ஐ.டி. போன்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும் மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐ.ஐ.டி இயக்குனரா, ஆர். எஸ்.எஸ். பிரச்சாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே காசி தமிழ் சங்கம் என்ற பெயரில் பா.ஜ.க .ஐ.க அரசியலுக்கான செயல்பாட்டு களமாக நிறுவனத்தை அனுமதித்தார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் இந்து மதம் அல்லாத பிற மத அடையாளம் கொண்டோர், சமூக நீதி காரணமாக இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தோர் பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை. இயக்குனரின் வெளிப்படையான ஆர். எஸ் எஸ் ஆதரவு பிரச்சாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும். பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில் விநாயகர் உருவம் தான் முதல் குளோனிங் என பேசினார். இது வலுவாக எதிர்க்கப்பட்டது. அவர் தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உடனடியாக இயக்குனர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். மேலும் இவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. மேலும் பாஜக ஆட்சி, ஆய்வு நிறுவனங்களை, இதர தன்னாட்சி ஆர்.எஸ்பாஸ். மையங்களாக மாற்றி வருகிறது என குற்றம் சாட்டியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், காமகோடி ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் அந்தஸ்தத்தை பயன்படுத்தி செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. எனவே ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என ஒன்றிய கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்று வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.