சமூக ஆர்வலர் கொலை வழக்கு.. குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்!
Dinamaalai January 23, 2025 08:48 PM

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக கவுன்சிலரும் மாவட்ட கபடி கிளப் தலைவருமான இவர், காட்டுபாவா மசூதி அருகே தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காரைக்குடியில் உள்ளனர். இந்த நிலையில், ஜகபர் அலி கடந்த 17 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகிலுள்ள மசூதியில் தொழுகைக்காகச் சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த மினி டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும், திருமயம் போலீசார் ஜகபர் அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு வந்த ஜகபர் அலியின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினர். திருமயம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள் மீது ஜகபர் அலி வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

கனிமவளக் கொள்ளையைத் தடுக்க தொடர்ந்து போராடி வந்த அவர், வேண்டுமென்றே கொல்லப்பட்டிருக்கலாம். எனவே, போலீசார் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், திருமயம் போலீசார் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கனிமத் திருட்டில் ஈடுபட்டவர்கள் திட்டமிட்டு ஜக்பர் அலியை விபத்தை ஏற்படுத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இதை கொலை வழக்காக மாற்றிய போலீசார், குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும், குவாரி உரிமையாளர் ராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைத் தேடி வந்தனர். அடுத்து நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஜக்பர் அலி கொலை வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் ராமையா, இன்று நமனசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி முரளிதரன் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். கனிமத் திருட்டுக்கு எதிராகப் போராடிய ஜகபர் அலியின் கொலை வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது குவாரி உரிமையாளர் ராமையாவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.