தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதேநேரம் பெரும்பாலான இடங்களில் காலை நேரங்களில் குளிர் அதிகமாகவே இருக்கிறது.இனி வரும் நாட்களிலும் இந்த குளிரும், லேசான மழையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.
தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஜனவரி 23ம் தேதி வியாழக்கிழமை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை ஜனவரி 24ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 25 முதல் 27 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஜனவரி 28, 29 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.