மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏலம் விடப்பட்ட நாள்முதல், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள், விவசாயிகள் நீண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்துச் சென்றது. முன்னதாக தமிழக அரசும் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருந்தது.
மத்திய அரசின் செய்திகுறிப்புமத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு அண்ணாமலை தந்த பேட்டியில், "தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்" என்றார்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, டெல்லியில் மதுரையைச் சேர்ந்த கிராம தலைவர்களை சந்தித்தார்.
கிராம தலைவர்கள் அமைச்சரிடம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமவளத் தொகுதி, அரிட்டாப்பட்டி பல்லுயிர் பெருக்க வனப்பகுதி மற்றும் பல பாரம்பரிய தலங்களை கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 24-ம் தேதி சுரங்க அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஏலம் அறிவிக்கப்பட்டப் பிறகு அதற்கு எதிராக சுரங்கம் அமையவிருக்கும் பகுதியில் பல்லுயிர் பெருக்க தம் அமைந்திருப்பதனால் ஏலத்துக்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனவரி 22, 2025 அன்று நடந்த சந்திப்பில், கிராம தலைவர்கள் நாயக்கர்பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொண்டனர். அவர்கள் பேசியதை அமைதியாக கேட்ட மத்திய அமைச்சர், பல்லுயிர் பெருக்க பாரம்பரியத்தை பாதுகாப்பிற்கு மத்திய அரசு முழுமையாக ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பெருக்க தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் அர்ப்பணிப்பையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமவளத் தொகுதி ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது." எனக் கூறப்பட்டுள்ளது.