டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி- அண்ணாமலை
Top Tamil News January 24, 2025 04:48 AM

மதுரை டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மதுரை டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. ஒரு திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வது சுலபம் கிடையாது. ஆகவே மத்திய அரசுக்கு தமிழக பாஜக சார்பில் நன்றி. இன்று அரிட்டாபட்டி பகுதி மக்கள் நிம்மதியாக தூங்குவர். டங்ஸ்டன் சுரங்கம் தேவையென்றாலும் விவசாய பகுதி, பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். சுரங்க அமைச்சகம் 2024 டிசம்பர் 24 தேதியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், டங்ஸ்டன் தொகுதி ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்திற்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டுள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 22.01.2025 அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் குழுவினரின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.