மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி வல்லாளபட்டி நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு கடந்த 07.11 2024 அன்று ஒப்புதல் வழங்கியது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், கடந்த பத்தாம் தேதி வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு போராட்டம் நடத்தியவர்களிடையே பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இத்திட்டம் ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மூலம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் அப்பகுதியைச் சேர்ந்த கிராம முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு இன்று ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர்.
இந்நிலையில் மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார். பல்லுயில் பாரம்பரிய தளத்தின் முக்கியவத்துவத்தை பாதுகாக்கும் வகையில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.