கோவை காதல் ஜோடி ஆணவக் கொலை வழக்கு - வினோத் குமார் குற்றவாளி என தீர்ப்பு.!
Seithipunal Tamil January 24, 2025 01:48 AM

கடந்த 2019 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் கனகராஜ் என்பவர் அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் அவரது மனைவி வர்ஷினி பிரியாவை சராமரியாக வெட்டினார். இந்த சம்பவத்தில் கனகராஜ், வர்ஷினி பிரியா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இதுவரை 14 பேர் சாட்சியம் அளித்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.