வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொட்டைப் பாக்குகள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சுமார் 100% சுங்க வரி கட்டினால் மட்டுமே கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக கொட்டை பாக்குகள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கோவையைச் சேர்ந்த இறக்குமதி நிறுவனத்திற்கு வந்த ஒரு கண்டெய்னரில் முந்திரி பருப்புகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் அந்த கண்டெய்னரை சோதனை செய்தனர். அப்போது அதில் முந்திரி பருப்புகளுக்கு பதிலாக தடை செய்யப்பட்ட கொட்டை பாக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த கண்டெய்னரில் இருந்த 23 மெட்ரிக் டன் எடையிலான கொட்டை பாக்குகளை மத்திய வருவாய் புலனாய் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.4 கோடியாகும். மேலும் இதனை சட்டவிரோதமாக இந்தோனேசியாவில் இருந்து கடத்தி வந்த கோவையைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன ஊழியர்கள் இருவரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த இரு வாலிபர்களையும் வரு வாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தூத்துக்குடி மாநகராட்சி 18 வது வார்டு திமுக கவுன்சிலர் சீனிவாசன் என்ற ஜான் (43), என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.