``டிரம்ப் பதவியேற்பு விழாவில் நீடா அம்பானி அணிந்த சேலை" -சுவாரஸ்யம் பகிரும் காஞ்சிபுரம் நெசவாளர்
Vikatan January 25, 2025 12:48 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி கலந்துகொண்டிருந்தனர்.

அந்த நிகழ்ச்சிக்கு நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டுபுடவையை அணிந்து சென்றிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்ந்திருந்தது. அந்தப் புடவையை மத்திய அரசின் ‘சந்த் கபீர்’ (நெசவாளர்களுக்கு வழங்கும் உயரிய விருது) விருதைப் பெற்ற காஞ்சிப்புரத்தின் நெசவாளர் கிருஷ்ண மூர்த்தி என்பவர்தான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். "கிட்டத்தட்ட 45 வருஷம் இந்தத் துறையில இருக்கேன். 15 வயசுல இருந்து இந்த வேலையை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

அம்பானி - நீடா அம்பானி

நெசவிற்காக 2010-ல் தேசிய விருதும், 2018-ல் ‘சந்த் கபீர்’ விருதும் வாங்கி இருக்கேன். 2018-ல எனக்கு ஏன் விருது கொடுத்தாங்கனா, 114 டிசைன்கள் கொண்ட ஒரு பட்டுப்புடவையைத் தயாரிச்சிருந்தேன். டெக்ஸ்டைல் படிக்கும் மாணவர்கள் எல்லாம் வருவாங்க. அவர்களுக்கு காண்பிப்பதற்காக அந்தப் புடவையை தயாரிச்சிருந்தேன்.

யாழி, சிம்பம், மயில்கள், கோபுரங்கள் என மொத்தம் 114 டிசைன்கள் புடவையில் இருக்கும். அந்தப் புடவைக்காகதான் விருது கொடுத்தாங்க. ஹைதராபாத்தில் ரிலையன்ஸ் ஷோ ரூம் ஒன்று திறந்தாங்க. அந்த ஷோ ரூம்மினுடைய மேனேஜர்கள் நான் தயாரிச்ச இந்த புடவையைப் பார்த்திட்டு கடை திறப்பு விழாவுக்கு அழைச்சிருந்தாங்க.

டிசைன்

என்னைய மாதிரி இருக்க நிறைய நெசவாளர்களையும் கூப்பிட்டிருந்தாங்க. அந்த ஷோ ரூம் திறப்பு விழாவுக்கு நீடா அம்பானி வந்திருந்தாங்க. நிறைய புடவைகள் அங்க இருந்துச்சு. நான் தயாரிச்ச புடவையும் அங்க வச்சுருந்தாங்க. அப்போ நீடா அம்பானி நான் தயாரிச்சப் புடவைய ஒரு 10 நிமிஷம் பார்த்திட்டு இருந்து ரொம்ப புடிச்சிருக்குனு மேனேஜர்களிடம் சொல்லிருக்காங்க. பிறகு அவுங்க என்னைய மேடம் கிட்ட அறிமுகப்படுத்தினாங்க.

அந்த சேலையை அவுங்களுக்கு கொடுத்திட்டேன். அதைத்தான் அவுங்க பதவியேற்பு விழாவில் கட்டிருக்காங்க. அதேபோல அவர்களின் மகன் திருமணத்திற்கு ஒரு சிவப்பு சேலை கட்டிருந்தாங்க. அந்த சேலைக்கும் நான்தான் டிசைன் செய்துக்கொடுத்தேன்.

கிருஷ்ண மூர்த்தி

வேறு ஒருத்தர் நெய்துக்கொடுத்தார். இந்த மாதிரி நேரடியாக இல்லாமல் ஆன்லைன் மூலமாக நிறைய சினிமா பிரபலங்கள் நான் டிசைன் செய்து நெய்த சேலையை வாங்கி இருக்கிறாங்க" என்று நெகிழ்வாகப் பேசினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.