கொஞ்சமாவது ஜனநாயகத்தின் மீது மரியாதை இருந்தால் அனிதா ராதாகிருஷ்ணனை தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக ஊழல் செய்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குவிப்பு வழக்கை பதிவு செய்தது பின்னர் வந்த திமுக அரசு.
அந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிந்து பல கோடி ரூபாய் மோசடி சொத்துக்களை முடக்கிய நிலையில், மீண்டும் சில சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடுத்த திமுக அரசே, அமலாக்கத்துறை இந்த வழக்கில் விசாரிக்கக் கூடாது என கூறுவது வெட்கக்கேடானது. எந்த கட்சியின் அரசு வழக்கு தொடர்ந்ததோ அதே கட்சியின் அரசு மீண்டும் அந்த நபரையே அமைச்சராக்கியிருப்பது தான் திராவிட மாடலின் அவலம்.
கொஞ்சமாவது, ஜனநாயகத்தின் மீது மரியாதை இருந்தால், மக்களின் மீது அக்கறை இருந்தால், அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.