பத்மபூஷன் விருது பெறும் அஜித் உருக்கம்..!
Top Tamil News January 26, 2025 01:48 PM

தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமி, கலைத் துறையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தனக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித். அதில், “குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கவுரவத்திற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்துக்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.

இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்பட அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது.
பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த எனது மோட்டார் ரேசிங் நண்பர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் ஆகியவை ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். நன்றி!

இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள்.

எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது. இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதைப் போலவே உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!” என்று அஜித் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.