புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்குவாரி உரிமையாளர் ராமையா பேசும் காணொளியை திமுகவின் ஐடி விங்க் வெளியிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெகபர் அலி என்பவர் அப்பகுதியில் செயல்படும் RR கல்குவாரிக்கு எதிராக போராடியதால் லாரி மோதி கொலை செய்யப்பட்டார்.
அதில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள கல்குவாரி உரிமையாளர் ராமையா அதிமுகவை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவர் கல்குவாரி, பெட்ரோல் பங்க் , பைனான்ஸ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.
கடந்த 2020 இல் திருமயம் தொகுதிக்கு உட்பட்ட துலையானூர் பஞ்சாயத்து தலைவராக அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரது குடும்பமே அதிமுக குடும்பம். அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்ருக்கு மிக மிக நெருக்கம்.
அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மினி கிளீனிக்கை துலையானூர் ஊராட்சியிலும் அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை இவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மினி கிளீனிக் அங்கு திறக்கபட்டது. முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து வந்து படு விமர்சியாக திறப்பு விழாவை நடத்தி உள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்காக நிறைய செலவு செய்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
இப்படி அதிமுக வின் உறுப்பினராகவும் துலையானூர் பஞ்சாயத்து தலைவராககவும் இருந்த ராமையா தான் வெங்களூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெகபர் அலியை கொலை செய்த முக்கிய குற்றவாளி.
அதிமுக நிர்வாகியை கொலை செய்த அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் ராமையாவையும் அவரது மகன் உள்ளிட்ட கொலையாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்துள்ளது காவல்துறை. கொலை செய்யப்பட்ட ஜெகபர் அலியை தங்கள் கட்சிக்காரர் என உரிமை கொண்டாடும் அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும் கொலை செய்த கல்குவாரி உரிமையாளரும் அதிமுகவை சேர்ந்த துலையானூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ராமையாவை அவர்கள் கட்சிக்காரர் தான் என்ற உண்மையை மறைக்க நினைக்கிறார்கள்.
அதிமுக நிர்வாகியை அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை செய்ததை திசை திருப்ப தேவையின்றி விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை மீதும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மீதும் வீண் அவதூறுகளை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி" என்று திமுகவின் ஐடி விங்க் தெரிவித்துள்ளது.