ஸ்டாலின் மாடல் அரசின் மீது நம்பிக்கையின்றி திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கேட்கிறாங்க - வரவேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்!
Seithipunal Tamil January 25, 2025 06:48 AM

வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளதை வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(24.01.2025) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

எதையோ மூடி மறைக்க காலம் கடந்த அவசர குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாக தாக்கல் செய்துள்ளது ஸ்டாலின் அரசு!

சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விடும் என்று ஆளும் ஸ்டாலின் அரசிற்கு ஏற்பட்ட அச்சத்தில் உருவாக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையா?

இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.

வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது!

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காகவும்-உரிமைகளுக்காகவும் இறுதி வரை அஇஅதிமுக துணை நின்று போராடும்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.