வேங்கைவயல்: "குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம்.." - வழக்கை CBI-க்கு மாற்ற திருமாவளவன் வலியுறுத்தல்
Vikatan January 25, 2025 01:48 AM

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது.

சம்பவம் நடந்து கிட்டதட்ட 2 வருடங்கள் கழிந்த நிலையில், காவல்துறை (சி.பி.சி.டி) விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரைப் பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், பட்டியலினத்தவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் காவல்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்க கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை:

வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரைக் குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

வேங்கைவயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.

எனவே, சி.பி.சி.ஐ.டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது.

Vengaivayal

உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.

அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.