மத்திய பட்ஜெட்டில் 3 முக்கிய அறிவிப்புகள்….! வருமான வரியில் மாற்றம்…? வெளியான முக்கிய தகவல்கள்…!!!
SeithiSolai Tamil February 01, 2025 01:48 AM

நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, வருமான வரி விலக்கில் மாற்றம் ஏதும் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் மக்களின் மத்தியில் அதிகரித்து கொண்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் வரி செலுத்துவதில் நடுத்தர வர்க்க மக்கள் தான் அதிகம். இதனால் மக்களின் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்றும், அதில் 3 முக்கிய அறிவிப்புகள் இந்த மத்திய பட்ஜெட்டில் வெளியாகலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அந்த 3 முக்கிய அறிவிப்புகள் என்னவென்றால், முதலாவது வரி செலுத்தக்கூடிய சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் ஸ்டாண்டரட் டிடக்ஷன் என்ற நிலையான வரி கழிவு தற்போது 75 ஆயிரமாக உள்ளது. இது தற்போது ஒரு லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது முக்கிய அறிவிப்பு என்னவென்றால், குறைந்தபட்ச வரிவிலக்கு பொருத்தவரையில் 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது என்பதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அவை 5 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட் தாக்கலில் இந்த அறிவிப்பு வெளியானால் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவது அறிவிப்பு என்னவென்றால், ஏற்கனவே இந்தியாவில் பழைய வரி விதிப்பு, புதிய வரி விதிப்பு என்று 2 முறைகள் உள்ளது. அதன் அடிப்படையில் புதிய வரி விதிப்பு முறையின் படி, 10 முதல் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 15% வரி செலுத்துகிறார்கள், 15 லட்சம் மேல் பெறுபவர்கள் 30% வரை வரி செலுத்துகிறார்கள். இந்த மத்திய பட்ஜெட் தாக்கலின் புதிய மாற்றத்தின்படி, 15 முதல் 20 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 25%, 20 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று முக்கிய அறிவிப்புகளும் 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.